search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவிலில் பண மோசடி"

    நாகர்கோவிலில் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ள தந்தை, மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் காரங்காடு செருப்பங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நிஷா (வயது 28). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.

    நான் பி.எஸ்.சி. படித்துள்ளேன். ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆலிவர், அவரது மகள் பவுலின் டோரா ஆகியோர் என்னை தொடர்பு கொண்டனர். இந்திய அரசின் அனுமதி பெற்ற சார் நிறுவனம் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படுவதாகவும், இது ஒரு மத்திய அரசு நிறுவனம் என்றும், அதில் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிளையில் மேலாளர் பதவி காலியாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த நிறுவனத்தில் தாங்கள் உயர் பதவி வகித்து வருவதால் தங்களுக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால் அந்த கிளை மேலாளர் பதவியை உங்களுக்கு பெற்று தருவதாக ஆசைவார்த்தை கூறினர்.

    அதனை நம்பி நான் ரூ.5 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்தேன். கோட்டாரில் உள்ள ஒரு கிளையில் பணி செய்ய வேண்டும் என்று வேலைக்கான பணி நியமன உத்தரவை வழங்கினார்கள்.

    அந்த கிளைக்கு சென்று நான் பணியில் சேர்த்தேன். அப்போது 20 பங்குதாரர்களை சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களிடம் ரூ.500 முதல் ரூ.5000 வரை வசூல் செய்ய வேண்டும் என்றும், நீங்கள் கட்டாயம் ரூ.3 லட்சம் வைப்புத்தொகை வைக்க வேண்டும் என்றும் கூறினார்கள். அவர்களை நம்பி பல்வேறு நபர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி கொடுத்தேன்.

    பணம் கொடுத்த பங்குதாரர்களுக்கு வீடு கட்ட வசதியும், கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் தருவதாகவும் பொய்யான வாக்குறுதிகளை கூறியிருந்தனர். இதுதொடர்பாக கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்த நிறுவனம் பற்றி விசாரித்தேன். அப்போது அந்த நிறுவனம் பண மோசடியில் ஈடுபட்டு செயல்படாமல் இருப்பதை அறிந்தேன். இதுபற்றி ஆலிவர், பவுலிடோராவிடம் சென்று விசாரித்தேன். ஆனால் அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் என்னை நம்பி அந்த நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் என்னை நெருக்குகிறார்கள். எனவே மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ள அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.

    நிஷாவின் புகாரை விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நடந்த சம்பவங்கள் உண்மை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து ஆலிவர், பவுலின் டோரா, தினேஷ் மற்றும் பார்த்தசாரதி ஆகிய 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் ஆலிவர், பவுலின் டோரா ஆகிய 2 பேரையும் இன்று கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் கைது செய்யப்பட்ட 2 பேரும் குமரி மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களை தொடங்கி ஏராளமான பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    நிஷாவை போல மேலும் பல பெண்கள் ஆலிவர், பவுலின்டோராவிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அவர்களில் பலர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார்கள் தொடர்பாகவும் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.



    ×